உலகின் தொன்மைக் காலத்தின் உன்னதமான ஓவிய பாரம்பரியங்களைக் கொண்ட நாடு
இந்தியா. ஆன்மீகம் அதன் அடி நாதமாக இருந்தது. அப்போதே மிக உயர்ந்த
செய்நேர்த்தி ஓவியங்களில் கைவரப் பெற்றிருந்தது. இந்தியத் தொன்மைக்கால
சுவர் ஓவியங்களைப்பற்றி உலகின் மிகச் சில வல்லுனர்கள்தான்
அறிந்திருந்தனர். இந்திய ஓவிய வரலாறு அவர்களால் இடைக்காலச் சுவடி
ஓவியங்கள், கையடக்க ஓவியங்கள் என்பதிலிருந்துதான் ஆராய்ச்சி செய்யப்
பட்டது. அஜந்தா ஒவியங்கள் என்பது தொடர்பற்ற ஒரு ஒளிக்கீற்று என்பதாகவே
கொள்ளப் பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வல்லுனர் திரு.
சி.சிவராமமூர்த்தி தென்னிந்திய சுவர் ஓவியங்கள் பற்றி விரிவான நூலொன்றை
வெளியிட்டார். அதில் சில கோட்டுச் சித்திரங்களும், புகைப் படங்களும்
இணைக்கப்பட்டு இருந்தன. ஆனால் புகைப்படங்களின் நேர்த்தி இன்மையால் அது
மெல்ல மக்கள் நினைவிலிருந்து அகன்று போனது.
இந்தியத் துணைக் கண்டத்தில் நமக்குக் காணக் கிடைத்த அஜந்தா ஓவியங் களே இயற்கை பாதிப்புகளுக்கு ஈடு கொடுத்து எஞ்சியவை. இந்திய-கிழக்கு நாடுகளின் ஓவிய வரலாறு இங்கிருந்துதான் துவங்குகிறது. அது புத்தமதம் சார்ந்த ஓவியங்களுக்கு ஊற்றுக்கண்ணாகவும், அகத்தூண்டுதலுக்கானதாகவும் விளங்கியது.
அஜந்தா குகை ஓவியங்கள் இரண்டு காலக் கட்டங்களில் தீட்டப்பட்டன. முதலாவது கால கட்டம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்றும், இரண்டாவது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்றும் வரலாறு சொல்கிறது. இரண்டாவது கால கட்டத்தில் அப்போது வட இந்தியாவில் ஆட்சி செய்த குப்தர்களும் தட்சிண நிலப்பகுதியில் ஆட்சி செய்த வாகடக மன்னர்களும் அதற்குப் பெரும் துணையாக இருந்தனர். அஜந்தா குகை ஓவியங்களில் ஹீனயானம், மஹாயானம் என்னும் புத்த மதத்தின் இரு பிரிவுகளின் ஓவியங்களும் உள்ளன. புத்தரின் வாழ்க்கையும் ஜாதகக் கதைகள் என்று குறிப்பிடப்படும் அவரது முந்தைய பிறவிகளின் வாழ்க்கையும்தான் அவற்றில் கருப்பொருளாக உள்ளன.
இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வித ஓவிய எச்சங்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு நூற்றாண்டிலும் நமக்குக் கிட்டியுள்ளன. கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கான ஓவிய வரலாறு அதில் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் நமது ஓவியங்களில் காலத் தொடர்ச்சி இல்லை என்பது ஒரு பொதுவான கருத்தாக இருந்து வந்துள்ளது. அஜந்தா ஒவியங்கள் உருவான காலத்திலேயே படைக்கப்பட்ட சுவர் ஓவியங்களில் மிஞ்சியவை பிதல்கோரா, எல்லோரா போன்ற இடங்களில் உள்ள பல குகை மண்டபங்களில் இன்றும் உள்ளன.
No comments:
Post a Comment