நலிந்து வரும் மரபுக் கலை பாவைக்கூத்து! - Drawing Master

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 25, 2016

நலிந்து வரும் மரபுக் கலை பாவைக்கூத்து!

நலிந்து வரும் மரபுக் கலை பாவைக்கூத்து!

தோல்_பாவைக்கூத்து1
70, 80 களில் பிறந்தவர்கள் எனில் நிச்சயம் ஓரிரு முறையாவது பார்த்திருப்பீர்கள். பாவைக்கூத்து என்பது இந்தியாவின் நசிந்து போன கிராமிய மரபுக் கலைகளில் ஒன்று. இந்தியா முழுவதும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஒரிஸ்ஸா, ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் இந்தப் பாவைக்கூத்து  இன்றளவிலும் அத்திப் பூத்தாற்போல எங்காவது நிகழ்த்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் முன்னைப் போல அதற்கான ரசிகர்கள் தான் இன்றில்லாமல் போனார்கள். தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தது தோல்பாவை கூத்து வகை. இந்த வகைப் பாவைக்கூத்து பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள இந்த யூ- டியூப் விடியோவைப் பாருங்கள். 
80 களின் மத்தியில் சினிமா தியேட்டர்கள் பரவலாக இல்லாதிருந்த காலத்தில், கேபிள் தொலைக்காட்சிகளென்றால் என்னவென்றே தெரிந்திராத காலத்தில் பாவைக்கூத்துகள் தமிழக கிராமங்கள் தோறும் உயிரோடிருந்தன. விடுமுறை நாட்களுக்கென்று பெரிதாக பொழுது போக்கு வசதிகளற்ற கிராமப்புறங்களில் இப்படியான பாவைக்கூத்து குழுவினர் வந்து இறங்கினாலே அது ஒரு திருவிழா போலத்தான் ஆரவாரமாக இருக்கும். வேடிக்கை பார்க்க நண்டும், சிண்டுமாய், பெரியவர், சிறியவர் வேறுபாடின்றி சாதி வித்யாசமின்றி சமத்துவக் கொள்கையோடு ஊர் கூடி விடும். குறைந்தபட்சம் 3 நாட்கள் அதிகபட்சம் 1 வாரம் வரை இந்தக் குழுவினர் கிராமத்தில் தங்கி பாவைக்கூத்து நடத்துவார்கள். துணிப்படுதாவால் வேலியமைத்து உள்ளே வெண் திரையை கழியில் நட்டு தோல்பாவை வடிவங்களை நூலில் கட்டிகொண்டு ஆட்டுவித்து கூத்து காட்டுவார்கள். இத்தைகைய கூத்துக் கலைஞர்கள் அப்போது மாட்டு வண்டிகளில் தான் வந்திறங்குவார்கள். கூத்துப் பார்க்கும் ஆர்வத்தில் அப்பொதெல்லாம் அந்தக் கலைஞர்களின் வாழ்வியல் சிக்கல்கள் பற்றியெல்லாம் நினைத்துப் பார்க்கத் தோன்றியதில்லை. அதிலும் நமது சக வயதில் அவர்களது குழந்தைகளைக் கண்டால் கொஞ்சம் பொறாமையாகக் கூட
இருக்கும். எத்தனை சுதந்திரமாக ஊர் ஊராய் மாட்டு வண்டிகளில் பிரயாணிக்கிறார்கள்! பெரும்பாலும் பள்ளிக்குப் போகச் சொல்லி பிள்ளைகளை வற்புறுத்தாத அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிகளைக் கொண்ட மாபெரும் குடும்பங்கள். தங்கும் ஊர்களில் எங்கும் சதா தெருக்களில் விளையாடித் திரியும் அவர்களது பிள்ளைகளின் பட்டாளம். இவற்றையெல்லாம் கண்டு அந்த வயதில் அந்த காலகட்டத்தில் அவர்கள் மீதும் அவர்களது கலையின் மீதும் கிராமப்புறக் குழந்தைகள் அனைவருக்குமே ஒரு மாயக் கவர்ச்சி இருந்தது. ஆனால் நரிக்குறவர்களுக்கு ஈடாக பாவைக்கூத்து நடத்துபவர்களின் வாழ்வும் அந்தரத்தில் கயிற்றில் நடப்பதற்கு ஒப்பானது தான் என்பதை இந்த யூ டியூப் விடியோ மூலம் புரிந்து கொள்ளலாம். 
தமிழகத்தில் கிராமப்புறங்களில் பாவைக்கூத்தென்றால் ராமாயண, மகாபாரதக் கதைகள் தான் பிரதானம், பத்து தலை ராவணன் ஒவ்வொரு தலையாக வெட்டப்பட்டு வீழும் காட்சி இன்றும் நினைவில் மறையாதிருக்கிறது. கூத்தின் ஆரம்பத்தில் வரும் கோமாளியையும் அத்தனை சீக்கிரம் மறந்து விட வாய்ப்பில்லை. இதிகாசக் கதைகள் மட்டுமல்ல தட்சயாகம், தசாவதாரம், நல்ல தங்காள் கதை இவையெல்லாம் என்றென்றும் நினைவில் நிற்பவை. இதோ கேரளத்தின் காத்திரமிக்க படைப்பான தட்சயாகம் விழாக்காலங்களில் கையுறைப் பாவைக்கூத்தாக நடத்தப்படுகிறது, அதைக் காண இங்கே கிளிக்குங்கள்.
சென்னையில் ’தக்‌ஷின் சித்ரா’ மற்றும் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் குயின்ஸ்லேண்டுக்கு எதிர்புறத்தில் தண்டலத்தை அடுத்த ’சொக்கிதானி’ராஜஸ்தானிய தீம் வில்லேஜ் போன்ற இடங்களில் இப்போதும் பாவைக்கூத்து நடத்தப்படுகிறது. இங்கே நடத்தப்படுவதை பொம்மலாட்டம் என்றும் சொல்லலாம். ஆட்டுத் தோலில் பொம்மை உருவங்கள் வரைந்து அவற்றை நூலில் கட்டி திரையில் கதைகள் நடித்துக் காட்டப்பட்டால் அதை நிழல் பாவைக்கூத்து என்றும் பொம்மைகளை கைகளில் மாட்டிக் கொண்டு நடத்தப்படுபவை கையுறைப் பாவைக்கூத்து என்றும் அழகழகான முழங்கையளவு பொம்மைகளை நூலில் ஆடவிட்டு நடத்தப்படுவது பொம்மலாட்டம் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் நவீன வடிவமென்று தற்போது பிரபலமாகி வரும் நிழல் பொம்மலாட்டக் கலை அல்லது நிழல் பாவைக்கூத்தைக் கூறலாம்.  எல்லாமும் பாவைகூத்து வகையறா தான். 
இப்படியான நலிந்து வரும் கலைகளை மீட்டெடுக்கும் ஆசை நம்மில் பலருக்கு இருக்கலாம். ஆனால் நேரம் தான் கிடைப்பதில்லை என்ற கவலை யாருக்கேனும் இருந்தால் அதைத் தீர்த்துக் கொள்ள ஒரே வழி பேசாமல் எளிமையாக நாமே இவற்றைக் கற்றுக் கொள்வது தான். தோல்பாவைக் கூத்துக்கு வண்ண தோல் பொம்மைகள் தேவைப்படும் அதெல்லாம் கற்றுக் கொள்ளவோ, பார்க்கவோ நேரமில்லை என்று நினைப்பவர்கள் இதோ இப்படி எளிமையான முறையில் நிழல் பொம்மலாட்டக் கலையைக் கற்றுக் கொள்ளலாமே!  இதில் நர்சரி குழந்தைகளுக்கான திரீ லிட்டில் பிக்கி கதை நிழல்
பாவைக்கூத்தாக நடித்துக் காட்டப்படுகிறது. அதற்கான விடியோ லிங்க் இதோ;
தனியாக பொம்மைகள் செய்வதற்கெல்லாம் நேரமில்லை என்பவர்களுக்கு இதோ வெறும் கைகளால் கூட பாவைக்கூத்து நடத்திக் காட்ட முடியும் என்பதைக் கற்றுக் கொள்வதற்கான விடியோ லிங்க்
இங்கிருக்கிறது. 
சமீபத்தில் வெறுமே கைகளைக் கொண்டு மட்டுமே நிழல் பாவைக்கூத்தாக நடத்தப்பட்டு வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்த ’தூய்மை இந்தியா’விளம்பரம் இதோ இங்கே; 
கலைகளை வளர்ப்பவர்கள் கவனத்துக்கு!  
பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகளில் தற்போதெல்லாம் அதிகம் பேசப்படக் கூடிய விவாதத்திற்கு உள்ளாகக் கூடிய சில பிரச்சினைகளில் ஒன்று டீன் பருவத்துக் குழந்தைகள் தங்களது பெற்றோரை மதிக்கவில்லை என்பது, இதைப் பற்றி எத்தனை முறை பேசிப் பேசி ஓய்ந்தாலும் இதற்கான நிரந்தரத் தீர்வென்ற ஒன்றை எப்போதும் எந்தப் பெற்றோராலும் எட்ட முடிந்ததா என்றால் இல்லையென்று தான் சொல்ல முடிகிறது. இதற்கான ஒரே மாற்றாக மனவியல் ஆலோசகர்கள் கூறி வரும் பதில். குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்த ஆக்கப்பூர்வமான ஏதாவதொரு விசயத்தில் முழுமையாக ஈடுபடச் செய்யும் வாய்ப்புகளை மாற்றி மாற்றி வழங்கிக் கொண்டே இருங்கள் என்பது தான். அதற்காக நமக்குப் பிடித்த விசயங்களை எல்லாம் குழந்தைகளிடம் திணிக்க வேண்டியதில்லை. நலிந்து வரும் கலைகள் நம்மிடையே ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் எளிமையானவற்றை, குழந்தைகளுக்கு ஆர்வமூட்டக் கூடியவற்றை தேர்ந்தெடுத்து கற்றுக் கொள்ளுங்கள் எனும் நிபந்தனை ஏதுமின்றி பொழுது போக்காகவும், விளையாட்டாகவும் கை வரச் செய்யலாம். 
உதாரணத்திற்கு இப்படிச் சில;
  • நாட்டுப்புற பாடல்களை விடுகதைகள் வாயிலாக அறிமுகம் செய்யலாம்.
  • நிழல் பொம்மலாட்டக் கூத்து முயற்சி செய்து பார்க்கலாம்.
  • ஓரங்க நாடகம் முயற்சிக்கலாம்.
  • அவரவருக்குப் பிடித்த நலிந்து வரும் கலை வடிவங்கள் ஏதாவதொன்றைப் பற்றி ஆல்பம் தயாரிக்கச் சொல்லலாம்.
எப்படியோ நலிந்து வரும் கலைகளும் சரி, நமது குழந்தைகளும் சரி ஒரு சேர சீரானால் அது போதுமே!

No comments:

Post a Comment