கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படிக்கப் படிக்க மனதுக்குள் பல சித்திரங்கள் எழும். வந்தியத் தேவன், குந்தவை, பழுவேட்டரையர் சகோதரர்கள், அருள்மொழிவர்மன் என்று வாசகர்களின் மனதில் உலவும் பாத்திரங்களும், பழையாறை அரண்மனை, கோடியக்கரை கடற்கரை என்று வாசிப்பின்போதே மனதுக்குள் உருப்பெறும் இடங்களும் நிறைந்த காவியப் படைப்பு அது. புகழ்பெற்ற ஓவியர் மணியம், அந்நாவலுக்கு வரைந்த ஓவியங்கள் தமிழ் வாசகர்களின் மனதை விட்டு நீங்காதவை. இத்தனை உணர்வுகளையும் கலந்து ஒரு சித்திரப் படைப்பாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலை உருவாக்கியிருக்கிறார் ஓவியர் தங்கம்.
1960-களின் ‘தினத்தந்தி’ வாசகர்களால் தங்கத்தின் ஓவியங்கள், கார்ட்டூன்களை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. இன்று வரை தொடர்ந்து வெளியாகும் ‘கன்னித்தீவு’ சித்திரத் தொடர்கதைக்கு, செறிவான தனது கோட்டோவியங்களால் அந்தக் காலகட்டத்தில் செழுமை சேர்த்தவர் அவர். கும்பகோணம் நகராட்சி நடத்திய சித்திரக் கலாசாலையில் ஓவியம் கற்றவர். புகழ்பெற்ற ஓவியர் கோபுலு, கலை இயக்குநர் கங்காதரன் போன்றோர் ஓவியம் கற்ற பள்ளி அது.
“அப்போ எனக்கு 19 வயசு. ஆதித்தனார் அய்யாதான் வேலை கொடுத்தார். அங்கேதான் ஓவியத்தின் நுணுக்கங்களை முழுமையா உணர்ந்தேன். ‘கருப்புக் கண்ணாடி’ங்கிற சித்திரத் தொடருக்கு ஓவியம் வரைஞ்சேன். அந்தக் காலகட்டத்துலதான், (1960-ல்) ‘கன்னித்தீவு’ தொடர் வெளிவரத் தொடங்கினது. எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தில் வரும் கன்னித்தீவின் பெயரையே இத்தொடரின் தலைப்பாக வைத்தார் ஆதித்தனார். ‘கனு’ என்கிற கணேசன்தான் முதல்ல வரைஞ்சார். இடையில கொஞ்ச நாள் அவருக்கு உடம்பு சரியில்லாம மருத்துவமனையில இருந்தார். அவருக்குப் பதிலா என்னைய வரையச் சொன்னார். பல மாதங்களுக்கு ‘கன்னித்தீவு’ கதைக்கு வரைஞ்சேன்” என்று நினைவுகூர்கிறார் தங்கம். “தினத்தந்தி குழுமத்தில இருந்தப்போ நிறைய கத்துக்கிட்டேன். தினம் நூறு தடவை பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களின் படம் வரையச் சொல்வார் ஆதித்தனார். ‘ராணி’ ஆசிரியர் அ.ம.சாமி நிறைய ஊக்கம் தந்தார்” என்கிறார் நெகிழ்வுடன்.
தினத்தந்தியில் பணியாற்றிய பிறகு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ‘ஓவியர் புகைப்படக் கலைஞர்’ பணியில் சேர்ந்தார். “அறுவை சிகிச்சை நடக்கும்போது அதைப் புகைப்படமாக எடுப்பது, ‘குரோமோசோம் ஸ்டடி’ எனும் ஆய்வில் நுண்ணோக்கி உதவியுடன் மரபணுக்களைப் படமெடுக்கவும் கத்துக்கிட்டேன். இதுக்காக, பாண்டிச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவமனையில பயிற்சி கொடுத்தாங்க” என்று சொல்லும் தங்கம், 1993-ல் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
“சின்ன வயசுல ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களை வரைஞ்சு பார்க்க முயற்சி செஞ்சிருக்கேன். ஆனா, அது சரியா வரலை. மருத்துவக் கல்லூரில வேலை பார்க்கும்போது ’பொன்னியின் செல்வ’னை சித்திரக் கதையா வரையணும்னு ஒரு ஆசை வந்திச்சி. மணியம் அளவுக்கு வரையணுமேன்னு ஒரு மலைப்பு. அப்படியே அந்த ஆசையைக் கைவிட்டுட்டேன்” என்கிறார். ஓய்வுக்குப் பிறகு, பல்வேறு நாளிதழ்களின் இணைப்பிதழ்களில் சித்திரக் கதைகள் வரைந்திருக்கிறார்.
2006-ல் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ தூரிகைக் கனவு துளிர்விட்டது. “எல்லாம் கூடி வந்தது இந்த வருஷம்தான். ஜூலை மாசம் ‘பொன்னியின் செல்வன்’ சித்திரக் கதையின் முதல் பாகத்தை என்னோட ‘தங்கப்பதுமை பதிப்பகம்’ மூலம் வெளியிட்டேன். நல்ல வரவேற்பு” என்கிறார். நாவலின் புதுவெள்ளம் பாகம் 1-ன் ‘திடும் பிரவேசம்’ அத்தியாயம் வரை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. முழுவதும் கருப்பு வெள்ளையில் உருவான கோட்டோவியங்கள், பழைமையும் காவியத்தன்மையும் கலந்து மனதைக் கவர்கின்றன.
“கல்கியோட எழுத்து வீச்சை எப்படி ஓவியமாக்குவதுன்னு சில சமயம் மலைச்சுப்போய் விடுவேன். என் மனைவியும் ஒரு ஓவியர்ங்கறதால எனக்கு நிறைய ஆலோசனை சொல்வாங்க” என்கிறார் தங்கம். அவரது மனைவி சந்திரோதயம் ‘மர்ம வீரன் ராஜராஜன்’ போன்ற சித்திரக் கதைகளுக்கு வரைந்தவர்.
வீரநாராயண ஏரி தொடங்கி, குரவைக் கூத்து மேடை, சன்னதம் வந்து ஆடும் தேவராளனின் ஆட்டம் என்று பல காட்சிகள் தங்கத்தின் கோடுகளால் கண்முன்னே விரிகின்றன. குறிப்பாக, கோட்டை மதில் சுவரில் வெட்டிவைத்த தலை போல் காட்சியளிக்கும் ஆழ்வார்க்கடியானின் தோற்றம், இருளின் மர்மம், ராஜ விவகார சதியாலோசனை என்று அற்புதமான விருந்து படைக்கிறது இந்தச் சித்திரக்கதை. இதற்காக பழையாறை, தாராசுரம் என்று பல இடங்களுக்குச் சென்றிருக்கிறார் தங்கம். வரும் டிசம்பரில் இதன் இரண்டாம் பாகத்தை வெளியிடத் திட்டமிட்டுக் கடுமையாக உழைத்துவருகிறார் தங்கம்.
“பள்ளிப்படையில பாண்டியர்கள் சதியாலோசனை செய்ற காட்சியை ரொம்ப சிரத்தை எடுத்து வரைஞ்சிட்டு இருக்கேன். பாத்துட்டுச் சொல்லுங்க.. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று பணிவுடன் சொல்கிறார் இந்த படைப்புலக ஜாம்பவான்!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
ஓவியர் தங்கம் | படம்: சி.கதிரவன்
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ சித்திரக்கதை
முதல் பகுதி
சித்திரம் : ப.தங்கம்
பக்கங்கள் : 110 | விலை : ரூ.200
தங்கப்பதுமை பதிப்பகம்,
ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின்ரோடு,
மாரியம்மன்கோயில் அஞ்சல், தஞ்சாவூர்-613501.
தொடர்புக்கு: 9159582467